search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பம் அதிகரிப்பு"

    ‘பானி’ புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்ல செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். #FaniStorm
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து கடந்த சனிக்கிழமை புயலாக மாறியது.

    இது தென்கிழக்கு வங்கக்கடல் அதையொட்டிய இந்திய கடலில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மற்றும் மே 1-ந்தேதியில் வட தமிழகம் - தென் ஆந்திரா கடற்கரைக்கு அருகில் வந்து அதன் பின்னர் திசை மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர உள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    பானி புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும், திரிகோண மலைக்கு 620 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 1050 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அதன் பிறகு திசை மாறி வடகிழக்கு திசையில் நகரக்கூடும். மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து பகல் 12 மணிக்கு தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு இல்லை. இதனால் நேரடி பாதிப்பு இல்லை.



    இந்த புயல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதியில் நெருங்கி வரும் வேளையில் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த புயல் தற்போது 880 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இது வட தமிழகத்திற்கு 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வந்து திசை மாறி செல்லக்கூடிய நிலை உள்ளதால் வடக்கு, வடமேற்கு திசை காற்று வீசி, வெப்ப நிலை உயரலாம்.

    புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்ல செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இதனால் அக்னி நட்சத்திர காலத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். #FaniStorm

    ×